Monday, August 18, 2008

மானம்

உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?
அவன்
கைகளை
வெட்டு.
கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே
அம்மணமாகவே
போராடு.
-காசி ஆனந்தன்

Sunday, August 17, 2008

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது....!

வசதியாகத்தானிருக்கிறது மகனே...
நீ கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்.
பொறுப்பாய் என்னை
ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறியபோது, முன்பு நானும்
இதுபோல் உன்னை
வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால்
நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!
முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்...
அன்று உனக்காக நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே..
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன்!
இதுவரை
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக
மனம் மகிழ்ச்சியடைகிறது.
நீ விடுதியில்
தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க மறுத்ததன்
எதிர்வினையே இதுவென்று
இப்போது அறிகிறேன்!
இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப் பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்
ஆயினும்...
உனக்கும் எனக்கும்

ஒரு சிறு வேறுபாடு
நான் கற்றுக் கொடுத்தேன்

உனக்கு..
வாழ்க்கை இதுதானென்று
நீ கற்றுக் கொடுக்கிறாய்

எனக்கு...
உறவுகள் இதுதானென்று!
நன்றி: பயணம்

Tuesday, August 12, 2008

தோழர்கள்

நாங்கள் நடந்து கொண்டே இருப்போம்...
எங்கள் கால்கள் நடையை நிறுத்தாது!
நாங்கள் எழுதிக் கொண்டே இருப்போம்...
எங்கள் கைகள் எழுதுவதை நிறுத்தாது!
நாங்கள் பேசிக் கொண்டே இருப்போம்...
எங்கள் உதடுகளும் நாவுகளும் பேசுவதை நிறுத்தாது!
ஆழமான கொள்கைக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்!!
மனிதகுல விடுதலைக்கு போராடும் தோழர்கள்....

Friday, August 8, 2008

பிழைப்பு

இந்தி படித்தால்
இந்தியாவெங்கும் பிழைக்கலாம்

ஆங்கிலம் படித்தால்
உலகமெங்கும் பிழைக்கலாம்

எப்போது வரும் தமிழனுக்கு
தமிழ்நாட்டில் பிழைக்கும் எண்ணம்?

Thursday, August 7, 2008

ஒற்றுமை

எரிக்கவும் குண்டுவீசி அழிக்கவும் தீயவர்கள் கட்டுகோப்பாக ஒன்று சேர்ந்திருக்கும்போது; மக்களை இணைத்து சேர்க்கவும் அமைதியை நிலைநாட்டவும் நல்லவர்கள் குறைந்தபட்சம் ஓர்அணியிலாவது சேரவேண்டாமா? (when bad people are united to burn and bomb; why can`t good people atleast join together to build and end?)
- மார்ட்டின் லூதர்கிங்.

Sunday, August 3, 2008

இலக்கியம்

களத்தில் நிற்கிறேன்

என் இலக்கியத்தில்
அழகில்லை என்கிறாய்!

தோரணம் கட்டும்
தொழிலோ எனக்கு?

வாளில்-

அழகு தேடாதே...
கூர்மை பார்.

-காசி ஆனந்தன்

பொதுத்தொண்டு

மனிதன் மற்ற மிருகங்களைப்போல் அல்லாமல் மக்களோடு கலந்து ஒரு சமுதாயமாக வாழ்கிறான்.சமுதாயப் பிராணியாக வாழும்போது மற்றவர்களுக்கு ஏதாவது தொண்டு செய்துதான் வாழவேண்டும்,மற்றவனிடமிருந்து தொண்டைப் பெற்றுத்தான் வாழ வேண்டும்.மனிதன் எவ்விதத்திலாவது சமுதாயத்திற்கு பயன்பட்டுத்தான் தீரவேண்டும். அந்த முறையில் என்னால் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யக்கூடுமானால் வாழவேண்டும் அதல்லாமல் ஏதோ ஓர் ஆள் சோற்றுக்கு கேடாக வாழ்வதென்றால் எதற்க்காக வாழ வேண்டும்.
-தந்தைபெரியார்