Wednesday, July 2, 2008

மனிதாபிமானம் உள்ளவர்கள் படிக்கவேண்டிய பதிவு!?

இந்தியாவில் மூன்று வேளை உணவின்றி தவிப்போர் 50 சதவிகிதத்திற்கு மேல். அதிலும் இரவு உணவின்றி வெறும் வயிற்றுடன் படுக்கைக்குச் செல்லும் குழந்தைகள் மட்டும் 65 சதவிகிதத்திற்கு மேல் என்று ஐநா அமைப்பின் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இவ்வாறு உணவுக்காக இந்திய ஏழைகள் படும்பாடு சொல்ல முடியாதது. ஆனால் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து சேமித்து வைத்து விநியோகிக்கும் மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்தின் அலட்சியத்தால் கோடிக்கணக்கானோரின் பசியைப் போக்க வேண்டிய உணவுப் பொருட்கள் வீணாகி குப்பைக்குச் செல்லும் அவலநிலை அம்பலத்திற்கு வந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயனால் இந்த அவலம் அம்பலத்திற்கு வந்துள்ளது. டில்லிவாசி ஒருவர் தகவல் உரிமைச் சட்டத்தின்படி, இந்திய உணவுக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளில் வீணான உணவுப் பொருட்களின் அளவும் மதிப்பும் எவ்வளவு என்று தகவல் கேட்டிருந்தார்.
கடந்த 1997 முதல் 2007 வரையிலான 10 ஆண்டுகாலத்தில் 10 லட்சம் டன் அளவிலான கோதுமை, அரிசி, நெல், மக்காச்சோளம் போன்ற உணவுப்பொருட்கள் வீணானதாக இந்திய உணவுக் கழகம் பதில் அளித்துள்ளது.
உணவுப் பொருட்களை வீணாகாமல் பாதுகாக்க மட்டும் ரூ.242 கோடி செலவிடப்பட்டதாக கூறியிருக்கும் அந்நிறுவனம் வீணாண பொருட்களை அப்புறப்படுத்தி குப்பைகளில் சேர்க்க மட்டும் 2.59 கோடி ரூபாயை செலவழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் வடமாநிலங்களான உ.பி, உத்தரகாண்ட், அரியானா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சல் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களில் மட்டும் வீணானது 7 லட்சம் டன் என்றும் கூறப்பட்டுள்ளது.
இப்படி வீணான இந்த 10 லட்சம் டன் உணவுப் பொருட்கள் ஒரு கோடி இந்தியரின் ஓராண்டு உணவுத் தேவையை நிறைவு செய்யக்கூடிய அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியைப் படித்தவுடன் எனக்கு நெஞ்சு கனக்கிறது. உங்களுக்கு...

-நன்றி.ஜிம்ஷா

No comments: