Wednesday, June 25, 2008

இமயமலையைக் கெடுக்கிறார்கள்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மலைப் பகுதியில் அமர்நாத் குகையில் பனி லிங்கம் என்பார்கள். இதைப் பார்க்கப் பெருங்கூட்டமாக இந்துக்கள் போகிறார்கள். இதற்கான ஏற்பாட்டை மதச்சார்பற்ற இந்திய அரசு செய்து தருகிறது. இதற்கு வரும் இந்துக்களைக் கவனித்து அனுப்புவதற்காகத் தனியே ஒரு வாரியம் உள்ளது. சிறீ அமர்நாத் கோயில் வாரியம் எனப் பெயர். இதன் தலைவர் மாநில ஆளுநர், இப்போதிருப்பவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்.இந்தப் பனி லிங்கம் என்பதே ஒரு புருடா. சுண்ணாம்புக் கற்களில், குகைகளில், குளிர் காலத்தில் வடியும் நீர் பட்டு இப்படிப்பட்ட பலவகை உருவங்கள் உருவாகும். குகைகளின் மேலிருந்து கீழாகவும், தரையில் இருந்து மேல் நோக்கியும் உருவாகும். மேலிருந்து கீழாகக் கூர்முனை உள்ளவை Stalactite என்றும் கீழிருந்து மேலாக வளர்பவை என்றும் கூறப்படுகின்றன. Iciclelike deposit mounting upwards from the floor of a cave as water containing lime dripping from above என்பதுதான் லிங்கம் எனப்படுகிறது. அமர்நாத்தில் அறிவியல் அறிவு இல்லாத இந்துக்களை இதைக்காட்டி ஏமாற்றி வயிற்றைக் கழுவுகிறது ஓர் அயோக்கியக் கும்பல். அதற்குத் துணை போனவர் இந்த மாநில ஆளுநர். இது இமயமலையில் மட்டும் இல்லை. நியூசிலாந்தில் இருக்கிறது, கிரீஸில் இருக்கிறது. பல நாடுகளில் உள்ளது.போன ஆண்டு லிங்கம் வளரவில்லை. என்ன செய்தார் தெரியுமா அந்த ஆர்.எஸ்.எஸ். ஆளுநர்? குச்சி அய்ஸ் தயாரிப்பதைப் போல, அய்ஸ் கட்டிகளை அப்பி லிங்கத்தை மொத்தமாக்கினார். அதுவும் கூட கரைந்து போய், உள்ளே இந்த எத்தர்கள் உருவாக்கி வைத்த சிமென்ட் கட்டை வெளியே தெரிந்துவிட்டது. ஆக, சிமென்டில் கட்டப்பட்ட உருளைக் கட்டையின் மீது சுண்ணாம்பு நீர் கொட்டி, ஸ்டாலக்மைட் உருவாவதை இவர்கள் பனிலிங்கம் எனப் புளுகி மடமையை வளர்க்கின்றனர்.போன ஆண்டின் அனுபவத்தை வைத்து இந்த ஆண்டு லிங்கத்தின் உயரத்திற்கும் மேலே இரும்புக் கம்பிக் கூண்டு அமைத்து வைத்துள்ளனர். பக்த கே()டிகள் தொட்டுத் தொட்டு, பனி கரைந்து போய்விட்டது சென்ற ஆண்டு! ஆகவே தடுப்பு வேலி! அய்யப்பன் மகரவிளக்கு மோசடியை கேரள அரசு ஒத்துக்கொண்டது போல, என்றைக்கு இதைக் காசுமிர் அரசு ஒத்துக் கொள்ளப் போகிறதோ? அந்த நாள் விரைந்து வரட்டும்.ஆளுநர் மாற்றப்பட்டு விட்டார் புதிய ஆளுநரும் நியமிக்கப்பட்டுவிட்டார். பழைய ஆள் இடத்தைக் காலி செய்யாமல் அழிச்சாட்டியம் செய்கிறார். மய்ய அரசும் மவுனமாக இருக்கிறது. என்னமோ நடக்குது! ஒண்ணுமே புரியலை!இந்நிலையில் மாநில முதலமைச்சர் குலாம் நபி ஆசாத், பனிலிங்க வாரியத்திற்கு 100 ஏக்கர் நிலம் கொடுத்திருக்கிறார். அது தனியார் நிலமா? இல்லை, அரசு நிலமா? இல்லை. அது காட்டிலாகா நிலம்! அதைக் கொடுப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா? கிடையாது. பின் எப்படிக் கொடுத்தார்?இந்திய வனச் சட்டத்தின்படி ஒரு ஏக்கர் வனத்துறை இடத்தை எதற்காவது அரசே எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டாலும் இருமடங்கு நிலம் (அதாவது இரண்டு ஏக்கர்) தந்தால்தான் தொடமுடியும். அந்தச் சட்டப்படி, 100 ஏக்கர் நிலத்தைப் பனிலிங்க வாரியத்திற்கு மாநில அரசு தந்தது என்றால், 200 ஏக்கர் அரசு நிலம் வனத்துறைக்குத் தந்திருக்க வேண்டும், தந்தார்களா?காட்டிலாகா நிலங்களையாருக்கும் தரக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவே போட்டிருக்கிறது. மீறி கொடுத்துள்ளனர்.ராஜா தவறு செய்யமாட்டார்.‘King can do no wrong’ என்று ஒரு சொலவடை இங்கிலாந்தில் இருந்தது. தவறு செய்த ராஜாவைக் கொன்ற நிகழ்ச்சியும் அங்கேயே நடந்தது. ஜனநாயகத்தில் அரசு தவறு செய்தால் அய்ந்தாம் ஆண்டு வரும் வரை காத்திருக்க வேண்டும்.சென்ற ஆண்டு லிங்கம் வளராமல் போனதற்கான காரணம், பக்தர்கள் கொட்டிய குப்பையும், கொளுத்திய விறகும் சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தியதால்தான் என்று அறிவியல் கூறியது. இந்நிலையில் அங்கு 100 ஏக்கரில் வீடுகளும் கட்டப்பட்டு, இந்துக்கள் குடியும் குடித்தனமுமாக இருந்தால் - சுற்றுச்சூழல் என்னாவது? குலாம் நபி ஆஜாத்துக்குக் கவலையில்லை. யாரையோ திருப்திப்படுத்த இமயமலையையே கெடுக்கிறார்.மக்கள் எதிர்க்கிறார்கள், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள், போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். மாநில அரசு கண்ணீர்ப்புகை வெடித்துத் தடியடி நடத்துகிறது. போராட்டத்திற்கு மதச் சாயம் பூசி, பா.ஜ. கட்சி எதிர்ப் போராட்டம் என்கிறது.மொத்தத்தில் இமயமலை கெடுக்கப்பட்டுவிட்டது.

No comments: