Thursday, June 12, 2008

கடவுள் இல்லாத சர்ச்சுகள் வேண்டும்

‘மதம், கடவுள்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என்ற இந்த நம்பிக்கைதான், அமெரிக்காவில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. இது பற்றி ‘ஜீண்மெக்னேகு’ எனும் நியூயார்க் பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மத நம்பிக்கை தொடர்பாக நிறுவனம் ஒன்று கணக்கெடுப்பு நடத்தியது. அதில் 16 சதவீத அமெரிக்கர்கள், தங்களுக்கு மதத்தில் நம்பிக்கை கிடையாது என்று கூறியுள்ளனர். 18-லிருந்து 29 வயதுள்ள இளைஞர்களில் 25 சதவீதம் பேர் தங்களை மத மற்றவர்கள் என்றும், எந்த மதத்திலும் நம்பிக்கை கிடையாது என்றும் கூறியுள்ளனர். 1986 ஆம் ஆண்டு இதே போல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் மத நம்பிக்கை இல்லை என்று 11 சதவீதம் பேர் மட்டுமே கூறியிருந்தனர். அமெரிக்காவில் நாத்திகர் குழுக்கள் - அரசும், சர்ச்சும், பிரிந்தே நிற்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகின்றன. கடந்த 13 ஆண்டுகளாக அமெரிக்க நாத்திக கழகத்தின் தலைவராக உள்ள எல்லன் ஜான்சன் கூறுகையில், “நாங்கள் சுதந்திரமானவர்கள்; எந்த அமைப்பிலும் நாங்கள் இணைத்துக் கொள்ள மாட்டோம்; அப்படி அமைப்பு தேவைப்பட்டால் நாங்களே உருவாக்கிக் கொள்வோம்” என்று கூறுகிறார். கடவுள் எதிர்ப்பு என்பதோடு மட்டும் நின்று விடாமல், டார்வின் பரிணாமக் கொள்கை மற்றும் பொது நெறிகளை மக்களிடையே பரப்ப வேண்டும் என்று அமெரிக்க நாத்திகர்கள் கருதுகிறார்கள்.
மதங்கள் இப்போதும் ஏன் உயிரோடு இருக்கின்றன? இந்தக் கேள்விக்கு அமெரிக்க நாத்திக சிந்தனையாளர்கள் கூறும் பதில் இது தான். அவர்களுக்கு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், உடைமைகள், வாரிசுகள், சடங்குகள், பணம், மதப் பிரச்சாரகர்கள் மற்றும் இறப்புக்குப் பிறகு இருப்பதாகக் காட்டப்படும் உலகம் - இவைகள்தான் மதங்களை வாழ வைத்துக் கொண்டுள்ளன. இதனால் சர்ச்சுகள் - தேவைகளைப் பூர்த்தி செய்யும் மய்யங்களாக செயல்படுகின்றன. அதேபோல் நாத்திகர்களுக்கும் கலாச்சார மய்யங்கள் வேண்டும் என்கிறார், ஹார்டுவேர்டு பல்கலைக்கழக பேராசிரியரும் நாத்திகருமான கிரேக் எப்குடின். ‘விஞ்ஞானமும் பகுத்தறிவும் அவசியத் தேவை; ஆனால் இந்த சிந்தனைகள், மருத்துவமனைக்கு போய் ஆறுதல் சொல்ல உடன் வராது. எனவே மதமற்ற மனித சேவைகளுக்கான கலாச்சார மய்யங்கள் நாத்திகர்களுக்கு வேண்டும்’ என்று அவர் கூறுகிறார். பல நாத்திகர்கள் - “சர்ச் கட்டிடங்கள் நாத்திகர்களுக்கு தேவை. ஆனால், அதில் கடவுள் மட்டும் இருக்கக் கூடாது” என்று கூறுகிறார்கள். - இவ்வாறு அந்த அமெரிக்க பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது

No comments: