சகலவிதமான வசதிகளோடும், ஊடக வெளிச்சத்தோடும், அடுத்த மகாத்மா என்ற விளம்பரத்தோடும், உண்ணாவிரதம் என்ற பெயரில் அன்னா ஹசாரேவும், பாபாராம்தேவ்களும் அவர்தம் அடிப்பொடிகளும் காமெடி செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள், கூட்டம் கூட்டமாக ஒரு மாதத்திற்கும் மேலாக உண்ணாவிரதம் உள்ளிட்ட எண்ணற்ற போராட்ட வடிவங்களைக் கையிலெடுத்திருக்கிறார்கள். திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அன்னா ஹசாரே கூட்டத்தின் போராட்டங்களைத் தன்னெழுச்சியான போராட்டம் என்று அளந்துவிட்ட ஊடகங்கள், கூடங்குளம் மக்களின் போராட்டத்தை உரிய முக்கியத்துவத்துடன் பதிவு செய்யவில்லை.
கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களைத் திரண்டெழுந்து போராடத் தூண்டியிருப்பது எது? அந்நியச் சதியா? இந்தியாவின் வளர்ச்சியைத் தடுப்பதற்கா? கிறிஸ்துவப் பாதிரிகளின் தூண்டுதலா? பிரதமர், முதல்வர் முதல் அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள்.... கூடங்குளம் மக்களின் அச்ச உணர்வு போக்கப்படும். அப்படியானால் நமக்குப் புரிகிறது. கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்குக் காரணம் வேறு எதுவுமில்லை. அச்ச உணர்வுதான். இது எதனால் தோன்றிய அச்ச உணர்வு? எப்போதெல்லாம் அறிவியல் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறதோ அப்போதெல்லாம் மக்களுக்கு ஏற்படும் அச்சம் போன்றதா இது?
திரையில் தொடர்வண்டி (ரயில்) ஓடுவதைப் பார்த்து, உண்மையில்தான் எதிரில் தொடர்வண்டி வருவதாக எண்ணி ஓடியதைப் போன்றதா? அம்மைப்பால் குத்த மறுத்து பயந்து ஓடியதைப் போன்றதா? கம்ப்யூட்டர் வந்தால் வேலை போய்விடும் என்றெண்ணி பயந்ததுபோலவா? இப்படி காரணமில்லாத பயங்களின் வரிசையில் இன்னொன்றுதான் அணுசக்திக்கெதிரான அச்சமா? இல்லை நம்பிக்கையினால் வந்த எதிர்ப்பா?
இராமர் கடலுக்கடியில் கட்டிய இடிந்துபோன பாலம், நீங்கள் சேது சமுத்திரக் கால்வாய் தோண்டினால் மீண்டும் இடிந்துவிடும் என்று கூப்பாடு போட்டு, எங்கள் நம்பிக்கை என்று வழக்குப் போட்டு திட்டத்தை நிறுத்தியிருக் கிறார்களே. அதைப் போன்ற எதிர்ப்பா இது? இராமன் கட்டிய பாலம் என்ற நம்பிக்கை என்பதற்காக ஆதரவு தந்த ஊடகங்கள், அதைச் சாக்குச் சொல்லி திட்டத்தைக் கிட்டத்தட்ட கைவிட்டுவிட்ட அரசு இவர்களெல்லாம் கொஞ்சமும் தாளம் தப்பாமல் இந்தப் பிரச்சினையில் ஒரே மாதிரியாக அச்ச உணர்வு தேவையற்றது என்கிறார்களே! அதில் எவ்வளவு உண்மையிருக்கிறது?
கூடங்குளம் மக்களும் அணு எதிர்ப்பாளர்களும் தொடுக்கின்ற வினாக்களுக் குரிய விடையை அறிவியலறிஞர்கள் தந்து, அச்சத்தைப் போக்கினால் எளிதில் பிரச்சினை தீர்ந்துவிடுமே! போக்கப்படும் என்ற பதிலைத் தவிர வேறு பதில் வரவில்லையே என்று சுட்டிக் காட்டுகிறார்கள் அவர்கள்.
எனவே, தீர்க்கப்பட வேண்டிய அய்யங்கள் என்ன? விடையளிக்க வேண்டிய வினாக்கள் என்ன? என்பதைப் பட்டியலிட்டால் விளக்கமளிக்க வசதியாயிருக்குமே என்பதுதான் இந்தத் தொகுப்பின் நோக்கம்.
அறிவியல் - அரசியல் குறித்தெல்லாம் பெரிய விழிப்புணர்வு இல்லாத வெகு சாதாரண மக்கள் என்று கருதப்படுவோரின் முதல் கேள்வியாக அணு ஆதரவாளர்களால் சொல்லப்படுவது:
ஜப்பான் புகுஷிமா போன்று இது எப்போது வெடிக்கும்? அப்படி நடந்தால் எங்கள் கதி? என்பதுதான். இதற்கான பதில் எளிதாகச் சொல்லப்படுகிறது. இது வெடிக்காது. சர்வ பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது. எந்த விபத்தும் நிகழாது என்ற பதில் தீர்க்காத கேள்விகளைத்தான் நாம் பட்டியலிடுகிறோம்.
விபத்து - பாதுகாப்பு - இழப்பீடு:
- விபத்தே நடக்காது என்பது உறுதியானால், விபத்து நடந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறோம் என்று பந்தயம் கட்டலாமே?
- அதற்கு நேர்மாறாக, யாருமே கவனிக்காத நேரத்தில் நாடாளுமன்றத்தில் அணு விபத்து இழப்பீட்டு சட்டமசோதா என்று ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றி, அதன் மூலம் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையாக ரூ. 1500 கோடி மட்டும்தான் வழங்கப்படும் என்றும், அதில் ரூ.500 கோடி மட்டும் விபத்துக்குக் காரணமான நிறுவனம் வழங்கினால் போதும், எஞ்சியதை இந்திய அரசு பார்த்துக்கொள்ளும் என்றும் சட்டம் போட்டது ஏன்?
- விபத்து நேர்ந்தால் மக்களைக் காப்பாற்றுவதைவிட, இழப்பீட்டுத் தொகையை வழங்குவதிலிருந்து குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனத்தைக் காப்பாற்றுவதில் பெரும் அக்கறை செலுத்தும் அரசை நம்புவதெப்படி?
- ஏற்கெனவே போபால் விஷ வாயுக்கசிவிலிருந்து மக்களைக் காப்பாற்ற எடுத்த நடவடிக்கைகளைவிட, விபத்துக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரை விமானத்தில் ஏற்றி அலுங்காமல் குலுங்காமல் அனுப்பிவைப்பதில் செலுத்திய அக்கறையை நாடே பார்த்ததே. இனியும் இந்திய அரசை நம்பமுடியுமா?
- அணுஉலை மிகுந்த பாதுகாப்பானது என்றால் அதை மத்திய டெல்லியிலோ, மயிலாப்பூரிலோகூட வைக்கலாமே? எல்லா தொழில் நிறுவனங்களையும் பெருநகரங்களைச் சுற்றியே அமைக்கும் அரசு அணுஉலைக்கு மட்டும் கிராமங்களைத் தேடுவதேன்? ஸீ உலகம் முழுக்க இயங்கி வரும் 437 அணு உலைகளில் இதுவரை 960 விபத்துகள் நடந்துள்ளதாகவும், இதில் 30 பெரிய விபத்துகளும் அடங்கும் என்றும் பன்னாட்டு அணுசக்தி நிறுவனம் தரும் தகவலை மறைப்பது ஏன்?
- உலகம் முழுக்க அறிந்த அமெரிக்காவின் மூன்றுமைல் தீவு விபத்துக்குப்பின் வேறு விபத்து நிகழாது என்றார்கள். பின்னர் ரஷ்யாவில் செர்னோபில் விபத்து நடைபெற்றது. மிகுந்த பாதுகாப்புடன் பின்னர் எல்லாம் செயல்படுவதாகச் சொன்னார்கள். ஜப்பானில் புகுஷிமா வெடித்தது. அடுத்த முறை இந்தியாவா? அப்போதும் இதேபோன்ற பதிலைத்தான் சொல்வீர்களா? கூடங்குளத்திலிருந்து பாடம் கற்றோம்; இனி இது போன்ற விபத்து நிகழாது என்று வேறு ஒரு அணுஉலை தொடங்கும் போதும் சொல்லப்படுமா?
- ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமாகத்தான் விபத்துகள் நடக்கின்றன. முந்தைய விபத்துகளிலிருந்துதான் பாடம் கற்கிறோம் என்றால் கூடங்குளம் மக்கள் செத்துச் சுண்ணாம்பானபின் நீங்கள் பாடம் கற்று என்ன பயன்?
- மனிதத் தவறுகள்தான் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் எனும்போது, தொழில்நுட்பக் கோளாறுகள் வராது என்று உறுதியளித்தும் என்ன பயன்?
தண்ணீர் தேவை: - அணு உலைகள் இயங்க மிகக் குறைந்தபட்சத் தேவையாக, ஒவ்வொரு நாளும் தேவைப்படும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரைத் தருவதற்கு இரண்டுவிதமான மூலங்கள் (Sources) வேண்டும் என்று அணுசக்தி முகமை வரையறுத்திருக்கும் நிலையில் பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் இல்லாததால் முழுக்க முழுக்க கடல்நீரைத் குடிநீராக்கி அதைக் கொண்டுதான், கூடங்குளம் அணுஉலைகள் இயங்கும் என்றால், அணுசக்தி முகமையின் கட்டுப்பாடு என்னாயிற்று?
- கடல்நீரைக் குடிநீராக்கும் இயந்திரம் பழுதாகிப் போனால், அதைச் சரி செய்வதற்கான பொறியாளர்கள் அரபு நாடுகளிலிருந்துதான் வரவேண்டும் என்ற சூழலில் உடனடிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?
- பூகம்பமும், சுனாமியும் வந்து கடல்நீரைக் குடிநீராக்கும் இயந்திரம் பழுதாகிப் போனதால்தான் தண்ணீர் கிடைக்காமல் வெப்பம் அதிகமாகி புகுஷிமா அணுஉலை வெடித்தது. அந்தத் தொழில்நுட்பம்தான் இங்கேயும் பயன்படுத்தப்படுகிறது. அப்படி யெனில் சுனாமி, பூகம்பம் வந்தால் நிலை என்ன?
- பூகம்பம், எரிமலைக் குழம்பு, சுனாமி ஆகிய ஆபத்து நிறைந்த பகுதிகள் என தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் அறியப்பட்டிருக்கும் சூழலில் இயற்கைப் பேரிடரை எப்படிச் சமாளிப்பீர்கள்?
- விமானம் வந்து மோதினாலும் தாங்கும் அளவு கனமான சுவர் அணு உலையிலிருந்து கதிர்வீச்சு வெளியாகாத வண்ணம் கட்டப் பட்டிருப்பதாகத் தகவல் சொல்லப்படுகிறது. அணு உலை மட்டும் பாதுகாப்பானதாக இருந்து பயனில்லை. அதற்குத் தண்ணீர் அனுப்பும் உப்பகற்றும் (Desalination) இயந்திரங்களும் அதே அளவு பாதுகாப்புடன் இருக்க வேண்டுமே?
- அணு உலைக்குள் மூலப்பொருள்கள் சுமந்து வரும் வாகனங்கள் வரும்போதும் போகும்போதும் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டு பணியாளர்கள் அப்பகுதியில் இல்லாதபடி செய்யப்படுகிறது. இந்த மூலப்பொருள்கள் சாலை வழியாக வரும்போது உடன்பயணிக்கும் வாகனங்களின் நிலை என்ன என்ற எளிதான கேள்விக்குப் பதில் என்ன?
மாற்று மின்சாரம்: - அணு உலை குறித்த அனைத்துத் தகவல்களும் பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டு செல்லப்பட்டு, வெளியில் சொல்லப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏற்படும் ஆபத்து, நோய்களை விளைவிக்கும் கதிர்வீச்சு போன்றவை குறித்த உண்மைத் தகவல்களைத் தெரிவிக்க மறுப்பதேன்?
- இந்தியாவின் மின் தேவையில் (கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான திட்டங்களுக்குப் பின்னும்) 2.5% கூட நிறைவு செய்யாத அணு உலைகள் நாட்டின் வளர்ச்சிக்கு எவ்விதத்தில் உதவும்?
- மின்சாரம் தயாரிக்க மட்டும்தான் அணு உலைகள் தொடங்கப்படுகின்றன என்று உறுதி கூறமுடியுமா? இதன் உப விளைபொருளிலிருந்துதான் அணு குண்டுகள் உருவாக்கத் தேவையான மூலப்பொருள் கிடைக்கிறது என்பதால்தான் அணு உலைகள் தொடங்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்குப் பதில் என்ன?
- கிட்டத்தட்ட உலகின் பெரும்பாலான நாடுகள் இருக்கும் அணு உலைகளை மூடும் முடிவுக்கு வந்த பின்னர், இந்திய அரசு மட்டும் அதில் அக்கறை செலுத்தாதது ஏன்?
- 1973இல் தொடங்கப்பட்டு, 1996இல் செயல்பாட்டுக்கு வந்த அணுஉலைக்குப் பிறகு புதிதாக 15 ஆண்டுகளில் எந்த அணு உலையும் அமெரிக்காவில் தொடங்கப்படவில்லை. செர்னோபில்லுக்குப் பிறகு ரஷ்யாவும், இப்போது புகுஷிமாவுக்குப் பிறகு ஜப்பானும் அணு உலைகளைப் பாதுகாப்பதைத் தவிர புதிய அணு உலைகள் உருவாக்குவதை நிறுத்தி விட்டன. ஆனால், இந்த நாடுகள் எதுவும் தனியார் அணுசக்தி நிறுவனங்களை நிறுத்த வில்லை. அவற்றின் தொழில் பாதிக்கப்படக் கூடாது என்பதாலேயே வளரும் நாடுகள் மீது அணுசக்தித் திட்டங்கள் திணிக்கப்படுகின்றன என்பதை மறுக்க முடியுமா?
- அணுமின்சாரம்தான் ஒரே வழி என்று இந்தியப் பிரதமரும், இந்திய அதிகாரிகளும், அறிவியலாளர்களும் சொல்லுகிறார்கள். இதுவரை உலகின் எந்த அணு உலையும் சொல்லப்பட்ட அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ததில்லை. 20,000 மெகாவாட் மின்சாரம் 1980க்குள் தயாரிக்கப்படும் என்று சொன்ன ஹோமிபாபாவின் கூற்றைத்தான் இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் 20,000 மெகாவாட் உற்பத்தி செய்யப்படும் என்று! அன்றைக்கொரு பேச்சு, இன்றைக்கொரு பேச்சு என்றில்லாமல் இன்னும் இரண்டு வருடத்தில் ஏசு வருவார் என்பதைப்போல, இன்னும் சில ஆண்டுகளில் அதிக உற்பத்தி என்னும் பொய்யையே எவ்வளவு காலம் சொல்வீர்கள்?
- இதைவிட அதிகமாக நிரந்தர பலனைத் தரும் காற்றாலை மின் திட்டம், கடலலை மின்திட்டம், கடலுக்குள் காற்றாலைத் திட்டம், சூரிய ஆற்றல் (எரிபொருள்) மின்திட்டம் என்று மாற்று வழிகளை அறிவியல் முன்வைக்கும் போதும் அணு ஆற்றல்தான் வேண்டும் என்று அடம்பிடிப்பதின் நோக்கம் என்ன? (பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?)
- மாற்று மின்திட்டங்களுக்கு அணு உலைகளை உருவாக்குவதைவிட மிகக்குறைந்த செலவுதான் ஆகும் எனும்போது அவற்றை முன்னிலைப்படுத்துவதில் தயக்கமென்ன?
- அணு மின்சாரம் விலை மலிவு என்பது பொய். அணு உலை அமைப்பது தொடங்கி, அதற்கான தண்ணீர் தயாரிப்பு, பராமரிப்பு செலவு, பாதுகாப்புச் செலவுகள், அணுக்கழிவு களைப் பாதுகாக்கும் செலவு (அகற்றும் செலவு அல்ல; அகற்றவும் முடியாது) என இவை யெல்லாம் அந்தக் கணக்கில் சேர்க்கப்படுவ தில்லையே! அதனை மறைப்பது ஏன்?
அணு கழிவுகள்: - ஸீ இவையெல்லாவற்றையும்விட, விபத்தே நடக்காமல், அணு உலை வெடிக்காமல், பாதுகாப்புக் குறைபடாமல் சகலமும் சரியாகச் செயல்பட்டாலும் இதிலிருந்து உருவாகும் அணுக்கழிவுகளை என்ன செய்யப்போகிறீர்கள்?
- 1997இல் இரண்டாம் முறையாக ஒப்பந்தம் போட்டபோது, அணுக் கழிவுகளைத் திரும்ப எடுத்துக் கொள்வதாகச் சொன்ன ரஷ்யா, இப்போது அப்படியெல்லாம் செய்ய முடியாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டபின் ஒவ்வொரு நொடியும் குவியப்போகும் அணுக்கழிவுகளை என்ன செய்வதாக உத்தேசம்?
- 30 ஆண்டுகள்கூட அதிகபட்சமாகச் செயல்பட முடியாத ஒவ்வொரு அணு உலையும் உருவாக்கும் அணுக்கழிவுகள் 50,000 ஆண்டுகளுக்குச் கதிர்வீச்சை வெளியிட்டுக் கொண்டேயிருக்குமே. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடு, அதற்கான செலவு, அதனால் ஏற்படும் ஆபத்து, நோய்கள், பருவமாறுபாடுகள், மனித டி.என்.ஏ. மாற்றங்கள் இவற்றை எப்படிச் சமாளிப்பீர்கள்?
- ஏ.சி., பிரிட்ஜ், அலங்கார விளக்குகள் என்று அநாவசியமாக அபரிதமான மின்சக்தியைப் பயன்படுத்தும் தற்கால ஆசைக்கு, இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் பொதிசுமக்க வேண்டுமா?
- காலாகாலத்துக்கும் கதிர்வீச்சைப் பரப்பி மரபணுவிலேயே நோய்த் தொற்று உருவாக்கக்கூடிய ஆபத்தான அணுக்கழிவு களைத்தான் நம் சந்ததிக்கு தந்துவிட்டுப் போகப் போகிறோமா?
- 1986இல் நிகழ்ந்த செர்னோபில் விபத்துக்குப்பின் அவசர அவசரமாகப் போடப்பட்ட கூடங்குளம் ஒப்பந்தமாக இருந்தாலும், உலகெங்கும் பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா என மூடப்பட்டுவரும் காலாவதியான அணு உலைத் தொழில் நுட்பத்தை வளரும் நாடுகளின் மேல் திணித்து, அதன் வியாபார நலனையும், விளைபொருள் நன்மையையும் மட்டும் அனுபவிக்க நினைக்கும் ஆதிக்க நாடுகளுக்கு வளரும் நாடுகள் பலிகடாவா?
- தமிழகத்தின் மின் தேவையைச் சமாளிக்க என்று சொல்லும் இந்திய அரசு, தமிழகத்திலிருந்து பெறப்படும் நெய்வேலி மின்சாரத்தைப் பிற மாநிலங்களுக்குத் கடத்துவதை நிறுத்தினாலே போதுமே? தமிழகம் தன்னிறைவு பெறுமே!
- போதாக்குறைக்கு, கடல் வழியாக கம்பிவடம் பதித்து இலங்கைக்கு மின்சாரம் கடத்தும் திட்டப்பணிகளை வேறு நடத்திவரும் இந்திய அரசு, கூடங்குளம் மின்சாரத்தில் யாருக்கு எவ்வளவு பங்கு? என்று வெளிப்படையாக அறிவிக்குமா?
- ஒற்றுமையாகப் போராடிவரும் மக்களைப் பிரிக்க இந்துத்துவ சக்திகளை ஏவிவிட்டிருக்கும் புதிய யுக்தி எதற்காக?
- போராட்டக் களத்தில் நிற்கும் கூடங்குளம் மக்களின் இதுபோன்ற இன்னும் பல முக்கியக் கேள்விகளுக்கான விடையை இந்திய அரசும், அரசு சொல்லும் அறிவியலாளர்களும் எப்போது தெரிவிப்பார்கள் என்று அம்மக்கள் மட்டுமல்ல, நாமும் எதிர்பார்க் கிறோம். மேற்கு வங்கமும், கேரளாவும் ஏற்க மறுக்கும் திட்டத்தைத் தமிழகத்தின் தலையில்கட்டி, கழுத்துக்கு நேராகத் கத்தியையும் கட்டிவிட்டிருக்கும் அரசிடம் இதை ஒட்டுமொத்தத் தமிழகமும் கேட்கிறது. ஏனெனில், அணு உலைக்கு ஆபத்து நேர்ந்தால் அது கூடங்குளத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பாதிக்கும்.
ரஷ்யாவில் நிகழ்ந்த அணு உலை விபத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது அண்டை நாடுகள்தான். ஜப்பானின் அணு உலை வெடிப்பு 6,500 கி.மீ. கடந்து அமெரிக்கக் கடற்கரையிலும் கதிர்வீச்சு அபாயத்தை உண்டாக்கியிருக்கிறது. கூடங்குளத்திலிருந்து அதிகபட்ச தமிழக எல்லை 650 கி.மீ.தான்!
- சமா. இளவரசன்
- நன்றி: உண்மை மாதமிருமுறை இதழ்
No comments:
Post a Comment